ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மாற்றுத்திறனாளி மனைவியான பிரேமா என்பவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இதையடுத்து 3 வயது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து பேருந்து மூலம் வேலைக்கு செல்ல 2 கி.மீ தூரம் நடந்து சென்று பேருந்து மூலம் வேலைக்கு சென்று வருகிறார்.
60 சதவீதம் மாற்றுத்திறனாளியான இவர் அரசு சமூக நலத்துறையில் கடந்த 8 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் கேட்டு விண்ணப்பம் செய்த நிலையில் 4 முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் காலை-மாலை வேலைக்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார். இந்நிலையில் ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்பதற்காக தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் பாலாவை உணர்வுகள் அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளி வாகனம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணின் மனுவை பெற்று கொண்ட பாலா நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதன் பின்னர் மாற்றுத்திறனாளி பிரேமாவும் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே நிகழ்ச்சி முடிவடைவதற்குள் நடிகர் பாலா உணர்வுகள் அமைப்பினரிடம் நிதி கொடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாகனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். இதையடுத்து நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நடிகர் பாலா மாற்றுத்திறனாளி பெண் பிரேமா வீட்டிற்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனத்தை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இதனால் ஆனந்த கண்ணீருடன் நடிகர் பாலாவுக்கு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் கணவர் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து தனது வீட்டிற்குள் பாலாவை அழைத்து தண்ணீர் வழங்கி உபசரிப்பு செய்தார்.மாற்றுத்திறனாளி பெண் வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் சந்தோஷத்தில் திளைத்தப்படி பாலாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்தார். மேலும், இந்த வாகனம் எவ்வளவு பெரிய உதவியாக இருப்பதுடன் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அளவு உதவியாக இருக்கும் என்று கண்ணீர் மூலம் விவரித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, அரசுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தகுதி இல்லை என்றும் என்னிடம் இருந்தால் உதவி செய்வேன் என்று கூறினார். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறேன். முன்பு வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவை நல்ல முறையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்றார். இந்த கால இளைஞர்கள் தெளிவாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து மாற்றுத்திறனாளி பெண் பிரேமா கூறுகையில், 44 வயது காரணமாக பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாகவும் வாகனம் கேட்டும் கிடைக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகள் வைத்து கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், பாலாவின் உதவி பெரும் உதவியுடன் புதிய நம்பிக்கையாக உள்ளதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்து சில மணி நேரத்தில் கோரிக்கை நிறைவேற்றிய நவீன கால கர்ணன் பாலாவின் செயல் அப்பகுதியில் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
0 coment rios: