ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலமாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ தூரத்திலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடமான பவானிசாகரில் 1948ம் ஆண்டு ரூ.10.50 கோடி மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அணையின் கரையின் நீளம் 8.78 கிலோமீட்டர். கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டர்.பிரதான கால்வாயில் இருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள், 1,900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப இயந்திரங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டது. 1953ம் ஆண்டு அணையின் கட்டுமான பணி நடந்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார்.
69 ஆண்டுகளை கடந்தும் உறுதி தன்மையுடன் காட்சியளிக்கிறது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த பவானிசாகர் அணை இன்றுடன் (19ம் தேதி) 69 ஆண்டுகளை நிறைவு செய்து 70வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
அணையில் ஆற்று மதகுகள் ஒன்பது, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் மூன்று மற்றும் உபரி நீர் ஸ்பில்-வே மதகுகள் ஒன்பது என 21 மதகுகள் உள்ளன. இதில், பவானி ஆற்றின் மதகுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் 8 மெகாவாட் மின்சாரமும் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பவானிசாகர் அணை 1955ம் ஆகஸ்ட் 19ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், 1957ம் ஆண்டு முதல் முறையாக அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அதன்பின், 1958, 1959, 1960, 1961, 1962 என தொடர்ச்சியாக ஆறு முறை நிரம்பியது. பின்னர், 2005, 2006, 2007ல் முழு கொள்ளளவை எட்டியது. இதன் பின்னர், 2018 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அணை முழு கொள்ளளவை எட்டியது.
69 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளித்து, மக்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்தை செழிக்க வைக்கும் இந்த அணையை பாதுகாப்போம்.
0 coment rios: