ஈரோடு பெரியவலசு பகுதியில் இரண்டு ஸ்கீரின்களுடன் பிரபலமான அண்ணா தியேட்டர் இயங்கி வருகிறது. இந்த தியேட்டரில் ஸ்கீரின் 1ல் விக்ரம் நடித்த படம் தங்கலான் திரைப்படமும், 2வது ஸ்கீரினில் ஆங்கில திரைப்படம் இரவுக் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் பார்த்து கொண்டிருந்தனர். தியேட்டரின் உள்ளே கேண்டீன் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தியேட்டர் கேண்டீனில் இருந்த பாப்கார்ன் இயந்திரத்தில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கி தீ விபத்து ஏற்பட்டது. உடனே, சம்பவம் இடத்தில் பணியிலிருந்த ஊழியர்கள், தியேட்டரில் இருந்த தீயணைப்பான் சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து கட்டுக்குள் வந்தனர்.
இருந்தபோதிலும், இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகைமூட்டம் தியேட்டர் முழுவதும் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த படம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து தியேட்டருக்குள் அதிக புகைமூட்டமாக இருப்பதால், படத்தை நிறுத்திவிட்டு, புகைமூட்டத்தை வெளியேற்றும் பணியில் திரையரங்க ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஸ்கீரின் 1ல் நிறுத்தி வைக்கப்பட்ட விக்ரம் நடித்த தங்கலான் படம் திரைப்படத்தை, மீண்டும் போடுவார்களா? என காத்திருக்கும் ரசிகர்கள் ஒருபுறம் காத்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தாங்கள் வாங்கிய டிக்கெட்டிற்கான தொகையை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: