இந்த நிலையில், சசிகுமார் அவசர தேவைக்காக தனது காரை அடமானம் வைத்து பணம் பெற ஈரோடு சோலார் அருகே உள்ள 46 புதூர் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் (வயது 44) என்பவரை அணுகினார். மதன்குமார் தஞ்சாவூரை சேர்ந்த அசரப் என்பவரிடம் அழைத்து சென்று காரை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுத் தந்துள்ளார்.
இதையடுத்து, சசிக்குமார் சில நாட்கள் கழித்து காரை திரும்ப பெறுவதற்கு பணத்துடன் மதன்குமாரை அணுகியுள்ளார். அதற்கு அவர் அசரப்பை நேரில் சந்தித்து காரை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அசரப்பை சசிகுமார் அணுகியபோது அந்த காரை வேறு ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.
இதனால் சசிகுமார் தன் காரை பெற்று தருமாறு மதன்குமாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சசிகுமார் நேற்று முன்தினம் ஜீவா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் மதன்குமார் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் வந்தனர். பின்னர் அவர்கள் சசிகுமாரை காரில் கடத்திக்கொண்டு விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் அவரை ஈரோடு செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து மதுவை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி குடிக்க வைத்து தாக்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிய சசிகுமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர், இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மதன்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 coment rios: