செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக அல்ல, தமிழ்நாட்டுக்காக: ஈரோடு எம்பி பிரகாஷ்

இதுகுறித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. இளைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளருமான கே.இ.பிரகாஷ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இம்மாநாடு ஓட்டுக்காக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இதை தமிழ் மக்கள் அனைவரும் திட்ட வட்டமாக மறுப்பார்கள். எந்த காலத்திலும் திமுக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தியது இல்லை. அண்ணாவின் கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாகும் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை தான் நடத்தியுள்ளது. அரசு நேரடியாக நடத்தவில்லை.

முதல்வர் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கான அரசு தான் இது எனக் கூறியுள்ளார். எனவே அரசியல் அமைப்பு அடிப்படையில் கூட ஆன்மீக பெருமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது இந்த அரசின் கடமையாகும். இதில் எந்த விதத்திலும் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு இல்லை. மாறாக பாஜக தான் மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு பிரதமர் மோடி அயோத்தி ராம பிரச்சனையை கையில் எடுத்து முன்பு வெற்றி கண்டார்.

தொடர்ந்து பாஜக இப்பிரச்சினையை எழுப்பி வளர்ந்தது. அதேபோன்று கடந்த தேர்தலில் ஜெய் ஸ்ரீ ராம் என கூறியவர் ஓட்டுக்காக ஒரிசாவுக்கு சென்று ஜெய் பூரி ஜெகன்நாதர் என முழக்கமிட்டார். ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ சாவி தமிழகத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டினார். இந்துக்களிடையே பேசும்போது உங்களிடம் உள்ள இரண்டு பசுக்களில் ஒன்றை பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள். வீடுகளில் ஒன்றைப் பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டார்.மத உணர்வை தூண்டி தொடர்ந்து அரசியல் நடத்துவது பாஜக தான். ஆனால் பெரியார் மற்றும் அண்ணா கலைஞர் வழியில் வந்த திமுக என்றும் மத உணர்வை தூண்டி அரசியலை நடத்தியதில்லை.திமுகவின் முன்னோடியான நீதி கட்சி ஆட்சியில் தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. கலைஞர் ஆட்சியில் பல ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேர் இயக்கப்பட்டது.

பெரியபாளையம் அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான கோயில்களுக்கு அவரது ஆட்சிக்காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பூசாரிகளுக்கு நல வாரியம், பென்ஷன் வழங்கப்பட்டது. திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் கொண்டுவரப்பட்டது. திருக்கோயில்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. அவரது பராசக்தி படத்தில் கூட கோயில்கள் கூடாது என்பதல்ல கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக கூடாது என்பதே எங்கள் கொள்கை என்று பேசினார்.

அவரது வழியில் முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது ஆலயங்களை புனரமைப்பு கும்பாபிஷேகம் பல கோயில்களில் நடக்கின்றன. கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று 1400 கோவில்களுக்கு மேல் இந்த கடந்த மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சுமார் 6000 கோடிக்கு மேல் திருக்கோயில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் செய்யாத ஒரு புரட்சியாகும் இது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் யார் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் என்பதை மக்களுக்கு தெரியாமல் இருந்தது ஏனென்றால் ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் தற்போது அமைச்சர் சேகர்பாபு அனைவரும் மகிழும் வண்ணம் இந்த மாநாட்டை நடத்தியுள்ளார். அவர் வந்த பின்பு இப்படிப்பட்ட ஒரு துறை இருக்கிறது என பலருக்கும் தெரிய வந்துள்ளது. கடந்த முறை மலேசியாவில் இந்த மாநாடு நடைபெற்ற போது தமிழ் கடவுள் முருகன். அதனால் தமிழகத்தில் மாநாடு நடைபெற வேண்டும் என்று பல பக்தர்கள் விரும்பினர். அதன் அடிப்படையில் பழனியில் மிகச் சிறப்பாக இந்த மாநாடு நடைபெற்றது.

பல ஆன்மீக பெரியவர்கள் மடாதிபதிகள் முருக பக்தர்கள் என உலகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். மலேசியா சிங்கப்பூர் இலங்கை பிஜி தீவுகள் ஜப்பான் போன்ற பல நாடுகளிலிருந்தும் முருக பக்தர்கள் மற்றும் பல இஸ்லாமியர்கள் வந்து முருகனின் பெருமையை உலகம் எங்கும் கொண்டு சென்றுள்ளனர். 130 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது எல்லாம் தமிழ் பண்பாடு கலாச்சாரம் தொன்மை போன்றவர்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவும்.

இதில் எந்த அரசியலும் இல்லை. முருக பக்தர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இன்னும் வாழும் ஆன்மீக பெருமக்கள் இம் மாநாட்டை போற்றுகின்றனர். ஆனால் வழக்கம் போல் பாஜகவினர் இதிலும் அரசியல் செய்ய முனைகின்றனர். அவர்களுக்கு மதத்தின் மீது ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. மது வெறி இந்துராஷ்டிரம் இந்துத்துவா, சனாதனம் ஆகிய கொள்கையின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. இந்த வெறுப்புணர்வு கொள்கைகள் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியாகும். அதற்கு தமிழக மக்கள் எப்போதும் இணங்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: