ஈரோடு மாவட்டத்தில் 10,308 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.79.95 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை அமைச்சர் முத்துசாமி இன்று (9ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 881 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.79.95 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (9ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் 881 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 10,308 உறுப்பினர்களுக்கு ரூ.79.95 கோடி மதிப்பீட்டிலும், தனிநபர் தொழில் முனைவோர் கடனாக 20 நபர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 23 உறுப்பினர்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.80.36 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதிகளில், 8,670 சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 6,105 சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 14,775 சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதில் 2021-2022 ஆம் ஆண்டில் 8,051 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 88,561 உறுப்பினர்களுக்கு ரூ.495.19 கோடியும், 2022-2023 ஆம் ஆண்டில் 11,769 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 1,39,120 உறுப்பினர்களுக்கு ரூ.751.36 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டில் 14,315 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 1,68,545 உறுப்பினர்களுக்கு ரூ.844.11 கோடியும் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் ஆண்டில் 15,034 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1109.00 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 7,476 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 76,175 உறுப்பினர்களுக்கு ரூ.500.53 கோடியும் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 2021 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.2591.19 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கடனுதவிகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வங்கி கடனுதவிகள் பெற்ற மகளிர் தொழில் முனைவோராக செயல்பட்டு, வாழ்வாதார மேம்பாடு அடைவதுடன், குடும்பத்தின் வருமானத்தினையும், நாட்டின் வருமானத்தினையம் உயர்த்தக்கூடிய வகையில் செயல்பட வேண்டும்.
மேலும், அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்து மகளிர் வாழ்வு முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு, கடன் இணைப்புகள் வழங்கிய வங்கியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு சுமார் ரூ.4,000 கோடி முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5,000 நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு பெறவுள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, விழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரகாஷ், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, நகராட்சித் தலைவர்கள் சிந்தூரி இளங்கோவன் (பவானி), ஜானகி ராமசாமி (சத்தியமங்கலம்), ஜனார்த்தனன் (புன்செய் புளியம்பட்டி), பேரூராட்சி தலைவர்கள் திலகவதி (கொடுமுடி), ஜெயலட்சுமி (கூகலூர்), ராதாமணி பாலசுப்பிரமணி (அவல் பூந்துறை), உதவி திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: