ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கல்கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 31). இவரது மனைவி ரேவதி (வயது 23). கர்ப்பிணியான ரேவதிக்கு இன்று (4ம் தேதி) நள்ளிரவு 1.20 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ரேவதியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டு சென்றனர். ஆம்புலன்சை அரப்புளிசாமி என்பவர் ஓட்டினார்.
ஆம்புலன்ஸ் கே.என்.பாளையம் ஸ்டேட் பாங்க் அருகே சென்ற போது ரேவதிக்கு பிரசவ வலி அதிகமாகி குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இருந்ததால், வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, அவசர கால மருத்துவ நுட்புணர் விஜய் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், தாய், சேயை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நள்ளிரவில் ஆள் அரவமற்ற பகுதியில் சமயோசிதமாக செயல்பட்டு, இரண்டு உயிர்களை காப்பாற்றி, பாதுகாத்த ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் விஜய், ஓட்டுநர் அரப்புளிசாமி ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
0 coment rios: