புதன், 4 செப்டம்பர், 2024

ஈரோடு சோலாரில் ஒன்றுகூடிய ரெட் டாக்ஸி ஓட்டுநர்களால் பரபரப்பு

ஈரோட்டில் வாடகை வாகன ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றதால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சோலாரில் ஒன்றுகூடி காரை ஒரு சேர நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரெட் டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ். இவர் இன்று (4ம் தேதி) ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள வித்யா நகரில் பயணியை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், பெருந்துறையில் இருந்து பயணியை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது பெருந்துறை காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள அப்பகுதியை சேர்ந்த தனியார் வாடகை ஓட்டுநர்கள் சுரேஷின் டாக்ஸியை வழிமறித்துள்ளனர்.

பின்பு, ஈரோடு கால் டாக்ஸிகளுக்கு, பெருந்துறை வாடகை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி சுரேஷ் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், சுரேஷின் காரில் இருந்த பயணியை காரில் இருந்து இறங்கச் சொல்லி, பெருந்துறை பகுதியை சேர்ந்த தனியார் வாடகை ஓட்டுநர் ஒருவர் அவரது காரில் ஏற்றி வித்யா நகரில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளார். 

இந்நிலையில், தங்களின் வாகனத்தில் இருந்த பயணிகளை வேறொரு வாகனத்தில் அத்துமீறி ஏற்றியதை கேள்விப்பட்ட ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று தனியார் வாடகை ஓட்டுநரிடம் நியாயத்தை கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பெருந்துறை தனியார் வாடகை கார் ஓட்டுநர் அவர் வைத்திருந்த கத்தியால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களை குத்த வந்ததாக ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த ரெட் டாக்ஸ் ஓட்டுநர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு, ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கார்களில் வந்து சோலார் பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாடகை கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

மேலும், அனுமதி இன்றி ஒன்று கூடி இருந்து வருவது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் இல்லை என்றால் அனைவர் மீது வழக்கு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

இதனையடுத்து, தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட ரெட் டாக்ஸி ஒன்று கூடி புதிதாக கட்டி வரும் பேருந்து நிலையத்தில் நின்றதால் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: