ஈரோடு அவல்பூந்துறை ரோடு செட்டிபாளையம் பகுதியில் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பள்ளி இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கூட கட்டிடங்கள், வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.
அன்று மாலை வரை முழுமையான சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் சந்தேகப்படும் படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என ஈரோடு தாலுகா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த இ-மெயில் அதே பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த 2 மாணவர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்களை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 2 மாணவர்களும் வேறு ஒரு பள்ளியில் இருந்து ஜேசீஸ் பள்ளிக்கு இந்த ஆண்டு படிக்க சேர்ந்து உள்ளனர்.
ஆனால், மாணவர்கள் 2 பேருக்கும் இந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை. இதனால் மாணவர்கள் 2 பேரும் திட்டமிட்டு பள்ளிக்கூடத்துக்கு தங்களுடைய செல்போனில் இருந்து இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது.
பின்னர், 2 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் போலீசார் கூறுகையில், இதேபோல் செயல்பட்டால் வழக்குப் பதியப்படும் என கடும் எச்சரிக்கை செய்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
0 coment rios: