ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

இன்று ஈரோடு உதயமான தினம்: 153வது பிறந்தநாள் கொண்டாடும் ஈரோடு

மஞ்சள் மாநகரம் என்றழைக்கப்படும் ஈரோடு 153வது பிறந்தநாளை இன்று (16ம் தேதி) கொண்டாடுகிறது. இந்த நாளைப் போற்றும் வகையில், ஈரோடு பற்றிய சில சுவாரசியமான செய்திகளை பார்ப்போம்.
ஈரோடை ஈரோடாக மாறியது:- 

ஈரோட்டில் பெரும் ஓடைகளாக விளங்கும் பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய 2 ஓடைகளின் நடுவே அமைந்த ஊர் ஈரோடு என்பதும், ஈரோடை என்று அழைக்கப்பட்ட பகுதி பிற்காலத்தில் மருவி ஈரோடு என ஆனதாகவும் காரணப்பெயர் கூறப்படுகிறது. சோழர் காலக் கல்வெட்டு ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம் என்று, ஈரோடு மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதை தலபுராணம் கூறுகிறது.

பண்டைய கோட்டை, பேட்டை என்று 2 பகுதிகளை கொண்டிருந்த ஈரோடு, கிழக்கு பகுதி பேட்டை, மேற்கு பகுதி கோட்டை என்று அழைக்கப்பட்டது. பண்டைய ஈரோடு கொங்கு 24 நாடுகளில் ஒன்றான பூந்துறை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. 1804ல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவானபோது பெருந்துறை தாலுகாவுக்கு சேர்ந்த ஒரு கிராமமாக ஈரோடு இருந்தது . பின்னர், 1868ல் ஈரோடு தாலுகா ஏற்பட்டு தாலுகா தலைநகரானது.

ஈரோடு நகரம் பிறந்தது:-

1871ம் ஆண்டு ஈரோடு நகரம் தனித்துவம் பெற்றது. ஏ.எம்.மெக்ரிக்கர் என்பவர் தலைமையில் ஈரோடு நகர பரிபாலன சபை 1871ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு விதை நடப்பட்ட நாளாக நகர பரிபாலன சபை உருவாக்கப்பட்ட இந்த நாள் ஈரோடு நகரின் பிறந்த நாளாக பதிவானது. நகர பரிபாலன சபையின் முதல் தலைவர் ஏ.எம்.மெக்ரிக்கர் உடன் 7 நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பின்னர் பல்வேறு தலைவர்கள் ஈரோடு நகரின் வளர்ச்சிக்கு உரமூட்டினார்கள். 1904ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் அந்தோணி வாட்சன் பிரப் ஈரோடு நகர பரிபாலன சபை தலைவராக இருந்த போது, மாட்டு வண்டி பாதைகளாக இருந்த ஈரோட்டின் முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய ரோடுகளாக மாற்றப்பட்டன.

ஈரோடு நகருக்கு மாநகராட்சி என்ற கனவை விதைத்தவர் தந்தை பெரியார். அவர் 3 ஆண்டுகள் (1917 முதல் 1920) ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டையும், வீரப்பன்சத்திரத்தையும் இணைத்து மாநகரமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். அவரது கனவை 90 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நனவாக்கினார். 2009-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக ஈரோடு உள்ளது. தற்போதைய ஈரோடு மாநகரம் 110 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
மஞ்சள் மாநகர்:-

ஈரோடு மஞ்சள் மார்க்கெட், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. விசைத்தறியில் முன்னணியில் உள்ளது. மத்திய, மாநில உதவியுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக ஈரோடு சித்தோட்டில் கட்டப்பட்டுள்ள டெக்ஸ்வெலி ஜவுளி விற்பனை மையம் ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல ஈரோட்டில் உள்ளன.

ஈரோடு தினம்:-

இப்படி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த ஈரோடு மாநகரின் நகர பரிபாலன சபை உருவாக்கப்பட்ட செப்டம்பர் 16ம் தேதி ஈரோடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்பது மறைந்த கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராகவின் ஆசையாகும். அதன்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் தேதியை பல்வேறு பொது அமைப்பினர் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) ஈரோடு தினமாகும்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: