தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் - 2 (குரூப் II மற்றும் IIஏ பணிகள்) அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று (14ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் தெற்குப்பள்ளம் தி பாரதி வித்யா பவன் பள்ளியில் (சிபிஎஸ்சி) அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய 3 வட்டங்களில் 87 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இத்தேர்விற்கென 3 கண்காணிப்பு அலுவலர்கள், 3 பறக்கும் படை அலுவலர்கள், 87 ஆய்வு அலுவலர்கள், 19 நடமாடும் குழுக்கள் உட்பட காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 25,475 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 18,943 பேர் (74 சதவீதம்) தேர்வு எழுதினர். 6,532 பேர் (26 சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை. மேலும், தேர்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: