ஈரோடு மாவட்டத்தில் காவிக்கரை, எல்பிபி வாய்க்கால், குளம் மற்றும் ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (14ம் தேதி) தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் குளூர் ஊராட்சி வேலாங்காட்டு வலசு எல்.பி.பி. வாய்க்கால் அருகில் தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைந்து காவிரிக்கரையில், நீர்நிலைகளில் 1 கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது,
பனை விதைகள் நடும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி குளூர் ஊராட்சியில் இப்பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பனை மரங்கள் அனைத்து காலத்திலும் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும்.
இந்த, பனை விதைகள் அனைத்தும் நாளை மரங்களாகும் போது, இந்த ஊருக்கும். இப்பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், இன்று விடுமுறையாக இருந்த போதிலும், மாணவ, மாணவியர்கள் பனை விதைகள் நடும் பணிக்கு மிகவும் ஆர்வமாக வந்துள்ளனர். இதில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.என்.சி.கல்லூரி போன்ற பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.
அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பனை விதைகள் நடும் நெடும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை தொடர்ந்து பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக் கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறுகிறது.
இதில், ஏற்கனவே தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நம்முடைய மாவட்டத்திலும் இப்பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியினை காவேரி கரையோரம் மட்டுமல்லாது, அனைத்து ஊராட்சிகளிலும் குளம் கரைகளிலும் இந்த பனை விதைகள் நடப்பட உள்ளது. பனை விதைகளை நடுவது மட்டுமல்லாது, இதனை தொடர்ச்சியாக நாம் பாதுகாக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெறுகிறது. எனவே, அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நடப்படும் பனை விதைகள் மரமாகின்ற வரையில் தங்களின் பொறுப்பாக கருதி பாதுகாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் பொழுது, பசுமையாக இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம், எல்.பி.பி வாய்க்கால், குளம், குட்டை, ஏரி கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர். ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், உதவி இயக்குநர் (தோட்டக்கலை துறை) சிந்தியா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள். தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: