மயிலாடுதுறை மாவட்டம் தர்மத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா ஈஸ்வரி (வயது 29). இவர் தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவாரூருக்கு காரைக்கால் விரைவு ரயிலில் பயணம் செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அதிகாலை ரயிலானது, தொட்டிப்பாளையம் ரயில் நிலையம் அருகே வரும்போது மர்ம நபர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து, ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் உமா ஈஸ்வரி புகார் அளித்தார்..
இதேபோல் , தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி (வயது 25). இவர் தனது குடும்பத்துடன் பட்டுகோட்டையில் இருந்து திருப்பூருக்கு கோயமுத்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்தார். ரயில் கடந்த 13ம் தேதி இரவு 20.15 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை தாண்டி மெதுவாக சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூபினி கழுத்தில் அனிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு வண்டியில் இருந்து குதித்து ஓடியுள்ளார். பின்னர், ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரூபினி புகார் அளித்தார்.
இவ்விரு சம்பவங்களில் தொடர்புடைய நபரை பிடிக்க இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவுப்படி, இருப்புப் பாதை காவல்துறை துணை தலைவர் அபிஷேக் தீக்ஷித்தின் நேரடி மேற்பார்வையில், இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் நேரடி கண்காணிப்பில், கோயமுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில், ஈரோடு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (27ம் தேதி) மதியம் இவ்விரு சம்பவங்களில் தொடர்புடைய பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராகேஷ் என்பவரை ஈரோடு ரயில் நிலைய பூங்கா அருகே கைது செய்து, அவரிடம் இருந்து 3 சவரன் நகையை மீட்டனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் ராகேஷ் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் 2009 முதல் 8 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட தனிப்படையினரை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா, காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித், காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர். மேலும், ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 இருப்புப்பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸ்அப் எண் 99625-00500 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.
0 coment rios: