ஈரோடு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் களப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இன்னல்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெறுகிறது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக் குழு சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
அதன்படி, நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், வடிகால்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண் : 1077, 0424-2260211-ல் தெரிவிக்க வேண்டும். பருவமழைக்காக வட்டார அளவில் அமைக்கப்பட்ட பல்துறை அலுவலர் அடங்கிய மண்டல குழுவினர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அது தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட துறையின் அலுவலருக்கு தெரிவித்து உடனடியாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளதா எனவும், அதன் முழு அகலத்திற்கும் நீர்வழிப்பாதை உள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெருமழை வெள்ள நீர் தடையின்றி செல்லும் வகையில் கழிவுநீர்ப் பாதைகளை பெருந்திட்ட பணிகள் மேற்கொண்டு சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அணைகள், ஏரிகளின் உபரி நீர் வெளியேற்றும் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறும் நீர்வழிப் பாதைகளை அவ்வப்போது ஆய்வு செய்து உபரிநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும். ஈரோடு மாவட்டத்திலுள்ள 17 மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் தணிக்கை மேற்கொண்டு செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும்.
தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் கால காவலர்கள் தங்களது பகுதியில் மழை,புயல், சரிசெய்ய மாற்றுப்பாதைகள் கொண்ட திட்ட வரைவு வைத்து கொள்ள வேண்டும். வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்க ஏதுவாக வட்டாட்சியர் மற்றும் மண்டல ஒருங்கிணைப்புக்குழு அலுவலர்களின் தொடர்பு எண்களை அவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் சாலைகளில் ஏற்படும் இடையூறுகளை மின்சாரத்துறை, பலத்த காற்று மற்றும் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில் அவற்றை உடனடியாக சரி செய்ய தேவையான பணியாளர் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை அலுவலர்கள், வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை, வெள்ளம், புயலினால் பாதிப்புக்குள்ளானவர்களை தங்க வைக்கப்படும் நிவாரண முகாம்களான பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள் ஆகியவைகளை பொதுப்பணித்துறை அலுவலர்களால் நேரில் தணிக்கை செய்து அவற்றின் கட்டிட உறுதித் தன்மையை உறுதி செய்திட வேண்டும்.
மேற்படி கட்டிடங்களில் மின்வசதி, குடிநீர் வசதி ஆகியன உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது, கரையோரக் கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். பெரிய அளவிலான வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரி கரைகளை அகலப்படுத்துதல் வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம், பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றின் நீர்வழிப்பாதைகளில் இருபுறங்களிலும் தூர்வாரி நீர்வழிப்பாதைகளை சீர் செய்யவேண்டும். நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட மதகுகள் மற்றும் சாலைப்பாலங்களில் வெள்ள நீர் வடிந்து செல்வதற்காக உள்ள மதகுகள் அனைத்தையும் புலத்தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதில் உள்ள செடிகொடிகள் அகற்றி சுத்தம் செய்து வெள்ள நீர் தடையின்றி வடிந்து செல்லத் தக்க வகையில் பராமரிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளம், குட்டைகள், திறந்தவெளி கிணறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். குளங்களில் உடைப்புகள் ஏற்படும் நேரங்களில் அதனை அடைக்க தேவையான அளவு சாக்குப்பைகள் மற்றும் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் மழையினால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட மதகுகள் மற்றும் சாலைப் பாலங்கள் ஆகியவற்றினை உடனடியாக புலத்தணிக்கை மேற்கொண்டு, இவற்றில் வளர்ந்துள்ள செடி,கொடிகள் ஆகியவற்றினை அகற்றவும், வெள்ள நீர் தங்கு தடையின்றி வடிந்து செல்லவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதே போல மாநகராட்சி, நகராட்சிகளும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவசர காலங்களில் பேரிடர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் கைபேசி எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் துறை வாரியாக தயார் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து வட்டாட்சியர்களும் தங்களுடைய வட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்க தகுதியான சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றின் பட்டியலினையும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் பெயர், கைபேசி எண், பராமரிப்பு பணியாளர்களின் கைபேசி எண் ஆகியவற்றினை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அலுவலர்களும் வட்டாட்சியர்களும் எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதோ அந்த இடங்களை நேரிடையாக தணிக்கை செய்து தேவைப்படும் முன்னெச்சரிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலையில் தூர் வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றி நீர்நிலைகள், நீர்நிலைக்கு வெள்ளநீர் வரும் பாதைகள் மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றினை தூர் வாரி வெள்ள நீர் தடையின்றி செல்வதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து துறைகளிலும் உள்ள களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்), ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், வட்டாட்சியர் அங்கமுத்து (பேரிடர் மேலாண்மை), அனைத்து வட்டாட்சியர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: