புதன், 25 செப்டம்பர், 2024

ஈரோடு அரசு மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை

ஈரோடு மாவட்டம் பாரதிநகர் பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பிரியா. இவருக்கு கடந்த 7ம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் (8 மாதம்) குறைமாதத்தில் 2.250 கிலோ கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தைக்கு முதலில் நுரையீரல் வளர்ச்சி குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அதற்கான குழந்தை செயற்கை சுவாசம் மற்றும் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான நுரையீரல் வளர்ச்சி மருந்து அளிக்கப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து இருந்ததை 2வது நாளில் கண்டறியப்பட்டது. மேலும், 3வது நாளில் அதற்கான அறுவை சிகிச்சை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. மேலும் குழந்தைக்கு இரத்த போக்கினை ஈடு செய்யும் வகையில் குழந்தைக்கு தேவையான இரத்தம் செலுத்தப்பட்டது. ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் மூலம் உணவு குழாய் உரிய முறையில் செயல்படுவதை எட்டாவது நாள் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு தற்போது குழந்தை நல்ல முறையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை பராமரிப்பு அரசுத்துறையில் முதல் முதலாக ஈரோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ரூ.8 லட்சம் வரை செலவாகும். இச்சிகிச்சையானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இச்சிகிச்சை முற்றிலும் இலவசமாகவும் நல்ல முறையிலும் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது குழந்தை நல அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் குழுவினர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் நடைபெற்றது.

இதுகுறித்து, குழந்தையின் தாயார் பிரியா கூறுகையில் நாங்கள் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் கூலி வேலை (பெயிண்டர்) செய்து வருகிறார். எனக்கு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2வது நாளில் மருத்துவர்கள் பரிசோதித்து, குழந்தைக்கு சுவாச பிரச்சனை உள்ளதாக தெரிவித்தனர்.

உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குறைபாட்டினை சரி செய்து, என் குழந்தையின் உயிரை காப்பாற்றினார்கள். இது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்வாகும். அரசு மருத்துவமனையில் என் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளித்து, மற்ற குழந்தைகளை போலவே, என் குழந்தையையும் ஆரோக்கியமான குழந்தையாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: