விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என ஒன்றிய அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்று ஈரோட்டில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார்.
ஈரோட்டில் இன்று (6ம் தேதி) சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட குழு அலுவலக திறப்பு விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கட்சியின் அகில இந்திய தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.
மேலும், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குறித்து ஊடகங்களில் குறிப்பிடுவது போல அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து கட்சிப் பணிகளுக்கு திரும்புவார்.
வன வளத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க, புலிகள் காப்பக பகுதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் சரணாலயத்தில் வசிக்கும் 25 ஆயிரம் மலைவாழ் மக்களை வெளியேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் கடிதம் அனுப்பி உள்ளது. வனத்தின் உள்பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு மக்களற்ற காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இதனை செய்து வருகிறது.
இதற்காக, வன பாதுகாப்பு திருத்த சட்டம் 2023ஐ கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக கனிம வளம் மற்றும் வன வளம் பெரிய நிறுவனங்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது. எனவே, புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காலம் காலமாக அங்கு வசித்த மக்களை வெளியேற்றுவது சட்டவிரோதமானது.
மேலும், இது வன உரிமை சட்டம் 2006க்கு எதிரானதாகும். 1972 வனச் சட்டத்தின் படி அந்த மக்களின் ஒப்புதல் பெறாமல் அவர்களை வெளியேற்றுவது தவறான நடவடிக்கையுமாகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இதற்காக ரூ. 14 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.
இதற்காக, சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவையில் 7 புதிய திட்டங்களை அறிவித்திருப்பதும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது சாத்தியமற்றது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும். அதைத் தவிர்த்து இது மாதிரியான செயல்கள் அவர்களை ஏமாற்றும் செயலேயாகும்.
ஏற்கனவே, ஒன்றிய அரசு நிறைய அறிவிப்புகளை இதுபோல் வெளியிட்டுள்ளது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போதைய அறிவிப்பும் அதுபோலத் தான் இருக்கும். தமிழ்நாட்டில், காலாவதியான சுங்கச்சாவடிகள் விதிமுறைகளுக்கு மாறாக இயங்கி வருகின்றன. அவற்றை ஒன்றிய அரசு அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு புதிய வனக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், அதில் மலைவாழ் மக்கள் நலனை முன் வத்து செயல்படும் அமைப்பினரை இடம் பெறச் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் அதில் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வனக் கொள்கையை உருவாக்குவதில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை இடம்பெறச் செய்யும் வகையில் மலைவாழ் மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளுக்கு அதில் உரிய இடத்தை அரசு தர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை அரசு நிச்சயம் பரிசீலனை செய்ய வேண்டும்.
வாச்சாத்தி வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி ஓராண்டாகியும் அதில் பல அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட 18 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை தரப்பட வேண்டும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அந்த கிராம மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி மக்களின்றி, 18 குடும்பத்தினர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இப்பேட்டியின்போது சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி. பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 coment rios: