திங்கள், 21 அக்டோபர், 2024

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஈரோடு திண்டல் சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக 27 ஜோடிகளுக்கு இன்று (21ம் தேதி) திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்புகள் 2024-2025 அறிவிப்பு எண்.27-ன் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 600 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக 100 ஜோடிகளுக்கு சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 35 ஜோடிகள் வீதம் 700 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது . 

அதனைத் தொடர்ந்து இன்று (21ம் தேதி) திங்கட்கிழமை ஈரோடு மாவட்டம், திண்டல் சைதன்யா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில், ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 27 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி (தங்கம் 4 கிராம்), மெட்டி, பட்டு புடவை (ஜாக்கெட், பாவாடை), பட்டு வேஷ்டி சட்டை, துண்டு, பாய், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பெட்சீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மர பீரோ, சுவாமி படம், குத்து விளக்கு (பித்தளை). பூஜை தட்டு (பித்தளை), மணி (பித்தளை), பொங்கல் குண்டா, குங்கும சிமிழ், காபி குண்டா, வடிகட்டி, சாப்பாடு தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார், ஈரோடு மாவட்ட செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: