ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு சென்னிமலைபாளையத்தைச் சேர்ந்தவர் சர்மா (வயது 29). பெருந்துறை மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் (17ம் தேதி) மாலை பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தனியார் பொறியியல் கல்லூரி விடுதி வந்தபோது, சிறுவன் ஒருவன் கை காட்டி ஜெ.ஜெ.நகர் வரை செல்வதாக கூறி லிப்ட் கேட்டுள்ளார். உடனே சர்மா அந்த அந்த சிறுவனை ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர், ஜெ.ஜெ.நகர் வந்ததும் சர்மா வாகனத்தை நிறுத்தியபோது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவர்கள் சர்மாவின் வாகனத்தின் முன்பு வந்து நிறுத்தினர்.
அப்போது, அவர்கள் 3 சிறுவர்களும் லிப்ட் கேட்டு வந்த சிறுவனுடன் சேர்ந்து சர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, செல்போனை பிடுங்கி கூகுள் பே மூலம் ரூ. 35 ஆயிரத்து 400 ரூபாயை தங்களுடைய செல்போனுக்கு மாற்றி கொண்டனர். மேலும், சர்மா விரலில் அணிந்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ½ பவுன் மோதிரத்தையும் பறித்துக் கொண்டு 3 பேர் வந்த இருசக்கர வாகனத்தில் 4 பேரும் தப்பிச் சென்றனர். பின்னர், இதுகுறித்து, சர்மா அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெருந்துறை கொம்மக்கோவிலைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரகதீஸ்வரன் (வயது 18), நாமக்கல் மாவட்டம் சிவம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மைதீஸ் (வயது 19), திருமலைப்பட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் ஆசிரியை சர்மாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும், 2 பேர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் நாமக்கலில் உள்ள பள்ளியில் படித்த போது ஏற்பட்ட நட்பு, கல்லூரி சென்ற பிறகும் தொடர்ந்து தற்போது வழிப்பறியில் வந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: