ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் பெருந்துறையில் தங்கி பணிபுரிந்து வருவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில் நேற்று இரவு பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சோதனை நடத்திய பெருந்துறை போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த 21 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹபிப் உசேன் (வயது 31), ஒலியுல்லா (வயது 28), பாத்திமா (22), பாரூக் உசேன் (வயது 35), மெஸ்டர் அலி (வயது 28), முகமது அன்வர் உசேன் (வயது 42), முகமது மான்டெக்ட் உசேன் (வயது 43) ஆகிய 7 பேரும் வங்காள நாட்டைச் சேர்ந்த அகதிகள் என்பதும் இவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணம் எதுவுமின்றி தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மற்றவர்களை விடுவித்த போலீசார், பிடிபட்ட 7 பேரின் முழு விவரங்களையும் சேகரித்து சென்னை தலைமை காவல்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். உஷா பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பெருந்துறை காவல்துறையினர், இன்று ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்னர் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
0 coment rios: