ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பருவாச்சி கிராமம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 13), சேத்துனாம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் தினேஷ்குமார் கடந்த மாதம் 16ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளான்.
தொடர்ந்து, சிறுவனது பெற்றோர் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்று பின்னர் வீடு திரும்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுவனுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் எனக்கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கோவைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கடந்த 20ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் கடந்த 28ம் தேதி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 30ம் தேதி உயிரிழந்தான். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த ரதி (வயது 34) என்ற பெண்ணுக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் நேற்று ஈரோடு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 coment rios: