வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று (25ம் தேதி) நடைபெற்றது.
இதில், வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம், தற்காலிக மிதவை உருவாக்கி மழை வெள்ளத்தில் மிதக்கும் விதம், கட்டட இடிபாடுகளில் உயிரினங்களை மீட்கும் உபகரணங்கள் மற்றும் அதன் செயல்பாடு. தீயணைப்பு துறை ஊர்தியில் பயன்படுத்தப்படும் சுழல் ரம்பம், ஸ்கூபா நீச்சல் உடை, உடைக்கும் ரம்பம், மூச்சு கருவி, அதிக அழுத்தம் கொண்ட காற்று பைகள், உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட், படகு. வெட்டும் மற்றும் விரிக்க வைக்கும் கருவி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களின் செயல் விளக்கம் நடைபெற்றது.
மேலும், கயிறுகள் மூலம் உயர்மாடிக் கட்டடங்கள், கிணறுகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முறை. ஏணிகள் மூலம் மீட்கும் முறை, மூச்சு நின்றவர்களுக்கு சிபிஆர் (CPR) மூலம் இதயம், நுரையீரல் செயல்பாடு மீட்டல், நம் சுற்றுப்புறத்தில் தீவிபத்து ஏற்பட்டால் அந்த தீக்காலங்களில் தீயணைப்பான்கள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் வகைகள் தீயணைப்பு வாகனங்களின் வகைகள், பயன்பாடுகள் ஆகியவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தீத்தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், உதவி மாவட்ட அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன் உட்பட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: