ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (25ம் தேதி) துவங்கியது.
இதனை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார். பின்னர், அவர் தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் வகையில் கண்காட்சி மற்றும் விற்பனையானது ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) இன்று (25ம் தேதி) துவங்கி தொடர்ந்து நவம்பர் 3ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயுத்த ஆடைகள், கால்மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சிப் பொருட்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய்கள், பாத்ரூம் க்ளீனர்ஸ், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது
இக்கண்காட்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக் குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வழிவகை செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா உட்பட உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: