சனி, 16 நவம்பர், 2024

அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சின்னமாதி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான சின்னமாதிக்கு இன்று (நவ.16) நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, தேவர்மலை 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் எலச்சிபாளையம் மலைக்கிராமத்திற்கு சென்று கர்ப்பிணி சின்னமாதியை அழைத்துக் கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதாக அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை ஓட்டுநர் கார்த்திக் ராஜா என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, எருமைகுட்டை என்ற இடத்தில் வந்த போது, பிரசவ வலி அதிகமாகி சின்னமாதி துடித்தார். 

நிலமையை அறிந்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் செந்தில்நாதன் வாகனத்தை நிறுத்திவிட்டு சின்னமாதிக்கு பிரசவம் பார்த்தார். இதனையடுத்து, நள்ளிரவு 2.46 மணிக்கு, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய், சேய் இருவரும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். குடும்பத்தினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் ஆகியோர் ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: