ஈரோட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் டெலிகிராம் என்ற செயலியில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பியுள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனில் வேலை எனக்கூறியவரின் வங்கி கணக்கிற்கு ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 946 செலுத்தி ஆன்லைனில் வேலை செய்தார்.
ஆனால் அவருக்கு எந்த வித வருமானமும் கிடைக்கவில்லை. இதனால் டெலிகிராம் செயலி மூலம் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த நபரோ டெலிகிராம் ஐடி கணக்கை முடக்கி இருந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஈரோடு மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் ஈரோடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டெலிகிராம் செயலி மூலம் மோசடி செய்த கொள்ளையர்கள் கோவை ரத்தினபுரி அண்ணாநகர் 2வது குறுக்கு தெரு, கண்ணுசாமி கவுண்டர் வீதியை சேர்ந்த அந்தோணி என்பவருடைய மகன் சஞ்சய் (வயது 23), கணபதிலட்சுமிபுரம், சத்தி ரோடு முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மகன் ராம்குமார் (28) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும், இவர்கள் இருவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டு, 25 வங்கி கணக்கு புத்தகங்கள், 24 வங்கி காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர்.
0 coment rios: