தேசிய அளவில் 17 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கான கபாடி போட்டிகள் மத்திய பிரதேசம் நரசிங்கப்பூரில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் பங்கேற்ற தமிழக அணிக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் கமல் பயிற்சியாளராகவும், அணியின் தலைமை மேலாளராகவும், அரசு பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் செந்திலாதிபனும் பொறுப்பேற்றிருந்தனர்.
இறுதிப் போட்டியில்,
இந்திய அளவில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் அரியானா மாநில அணியை எதிர்த்து விளையாடிய தமிழக கபாடி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்து, இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து தமிழக அணியில் பங்கேற்று ஈரோடு திரும்பிய வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபாடி கழகம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பிற்கு தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்தும் மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய , அணியின் மேலாளர் செந்திலாதிபன் கூறும் போது, தற்போது இரண்டாம் இடத்தை பெற்றிருந்தாலும் வரும் காலங்களில் தமிழக அணி நிச்சயமாக முதலிடம் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெச்சூர் கபாடி கழகத்தின் துணைத் தலைவர்கள் ஆண்டாள் குமார், உத்திராஜ் மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: