திங்கள், 25 நவம்பர், 2024

ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.25) திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ.25) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, சிறுதொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை, குடிநீர் வசதி வேண்டுதல் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 327 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் விசாரணை செய்து, உரிய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 7 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளையும், சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். 


அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 2 தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயிலுவதற்காக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்திற்கான கல்வி உதவித்தொகையினையும் அவர் வழங்கினார். 

இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஈரோடு மாவட்ட மாணவியர் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் 5 மாணவியர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பினையும், ஈரோடு மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் ஒரு நபருக்கு வீட்டில் சொந்த நூலகம் வைத்திருப்போர் விருது, ரூ.3 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கேடயம், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.


மேலும், மாவட்ட மைய நூலகத்தில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை நூலகருக்கு டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் நல்நூலகர் விருது, மாநில அளவில் நூலக இயக்கம் வளர முனைப்புடன் சிறப்பாக பணியாற்றிய ஒரு நபருக்கு நூலக ஆர்வலர் விருது, மாநில அளவில் நூலகத்திற்கு காலிமனை மற்றும் கட்டடம் பெற்று நூலக வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கு ஒரு நபருக்கு கேடயத்தினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: