ஞாயிறு, 3 நவம்பர், 2024

ஈரோட்டில் ரூ‌.4 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேரிடம் போலீசார் விசாரணை

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களை ஆன பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்த புகாரில், 4 பெண் புரோக்கர்கள் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்து ஈரோடு பேருந்து நிலைய பகுதியில் தங்கி இருந்தார்.

அப்போது சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார். சந்தோஷ்குமார், நித்யாவிடம் நமக்கு குழந்தை பிறந்தால் அதனை விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் பெண் இடைத்தரகர்களான ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.

அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசியுள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்று உள்ளனர்.

இதனிடையே, பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையை விற்ற பின்னர் நித்யா குழந்தை நினைவாக இருந்து உள்ளார். குழந்தையை விற்பனை செய்தது குறித்து, நித்யா நடந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் நடந்தவற்றை கூறினார்.

இதையடுத்து சந்தோஷ் குமார், பெண் இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியினரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளதா எனவும், வழக்கு குறித்த முழு விவகாரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தை விற்ற விவகாரம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: