வியாழன், 7 நவம்பர், 2024

அந்தியூர் அருகே மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மாரடைப்பால் மரணம்: அமைச்சர் இரங்கல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் அந்தோணி ஜெரால்டு (வயது 49). இவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் சுண்டப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி பாத்திமாமேரி. அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் அந்தோணி ஜெரால்டு உள்ளனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் அந்தோணி ஜெரால்டு குடும்பத்துடன் வசித்தார். நாள்தோறும் வீட்டில் இருந்து பர்கூர் சுண்டப்பூருக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வழக்கம்போல் வகுப்பறையில் அந்தோணி ஜெரால்டு பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது திடீரென நாற்காலியில் அமர்ந்தவர் அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்கள் பதறிப்போய் அவரை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அந்தோணி ஜெரால்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் அங்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :

ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது. மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.

அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: