ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, புன்செய்புளியம்பட்டி நகராட்சி வார்டு எண் 18, ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியினை அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, புன்செய்புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.05 கி.மீ நீளத்திற்கு ரூ.32.02 லட்சம் மதிப்பீட்டில் அரியப்பம்பாளையம் - தபோவனம் செல்லும் சாலை வலுப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி பாரதி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் 36 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பவானிசாகர் அணை நீரேற்று நிலையம், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.52.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சப்பகவுண்டன்புதூர் காலனி, கோணமூலை பகுதியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடு சீரமைக்கும் பணியினையும், அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.03 கோடி மதிப்பீட்டில் 40 கடைகள் மற்றும் 130 திறந்த வெளி கடைகளுடன் வாரச்சந்தை மேம்படுத்தும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இயங்கும் சத்தியமங்கலம் அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் அளுக்குளி - காரப்பாடி ரோடு ஜெ.ஜெ நகர் 4/0 கி.மீ நீளத்திற்கு புதிய பாலம் கட்டும் பணியினையும், கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் ஜிம்னாஸ்டிக் மைதானம் கட்டப்பட்டு வருவதையும், கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், புன்செய்புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர்கள், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: