காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கனவே சுவாசப் பிரச்சினை உண்டு. மழைக்காலங்களிலும், பனிக் காலங்களிலும் சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்படுவார். வீட்டில் அவ்வப்போது 'நெபுலைசர்' உதவியுடன் சுவாசிப்பார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் நுரையீரல் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
நேற்று (நவ.27) பகலில் சாதாரணமாக காணப்பட்டார். எழுந்து நடமாடினார். மாலையில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.28) காலை 11.45 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பெறும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
0 coment rios: