வெள்ளி, 22 நவம்பர், 2024

ஆண்களுக்கான நவீன குடும்ப நல இருவார விழா: விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்

ஆண்களுக்கான நவீன குடும்ப நல இருவார விழா: விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆண்களுக்கான நவீன குடும்ப நல இரு வார விழா 21.11.2024 முதல் 04.12.2024 வரை நடைபெறுவதை முன்னிட்டு, விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்கம் சார்பில், நிரந்தர ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை விளம்பரம் இரு வார விழாவாக நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை "குடும்பக் கட்டுப்பாடு பற்றி இணைந்தே பேசுவோம், அதனை இன்றே தொடங்குவோம்" என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.

இதில் ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்து, குடும்ப நல விளக்கக் கையேடு மற்றும் கைப்பிரதிகளை வெளியிட்டார். இந்த விழிப்புணர்வு வாகனம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 34 ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை இலக்கான 300 முழுமையாக எய்திட திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையானது, 100 சதவீதம் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது. மேலும், மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. கடின உழைப்பிற்கு தடையில்லாதது. கருத்தடை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1,100 மற்றும் உதவிக்கு வருபவர்களுக்கு ரூ.200ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று அவதிப்படுவதைவிட பிறந்ததை காப்பாற்றி இனி பிறப்பதைத் தவிர்த்து அளவான குடும்பம் அமைத்து ஆனந்தமாய் வாழ தந்தையர்கள் இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம் என குடும்ப நலத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்விழாவில், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) கவிதா, அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், மற்றும் மாவட்ட குடும்பநல செயலக மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் சங்கரசுப்பு உட்பட குடும்ப நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: