சனி, 30 நவம்பர், 2024

கோபி அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் கைது

கோபி அருகே நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம், கீரிப்பள்ளம் தோட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்லால் (வயது 55). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் தோட்டத்து வீட்டில் மோகன்லால் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இதனைக் கண்டு நாய் குரைத்துள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகன்லால் தன் வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். 


அப்போது, தோட்டத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். திடீரென அந்த நபர் மோகன்லாலை வெட்ட வந்ததாக தெரிகிறது. இதனால் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள மோகன்லால் தான் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் அந்த நபரை 2 முறை சுட்டார்.

இதில் அந்த நபரின் மார்பு, வயிறு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அந்த நபர் இறந்தார். இதைக்கண்டு பயத்தில் மோகன்லால் அங்கிருந்து தலைமறைவானார். நள்ளிரவில் துப்பாக்கி சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர், செங்கோட்டையன் காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கண்ணன் (வயது 50) என்பது தெரிய வந்தது. எதற்காக கண்ணன் நள்ளிரவில் மோகன்லால் தோட்டத்திற்கு வந்தார் என தெரியவில்லை. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மோகன்லாலை தேடி வந்தனர்.

இதனிடையே, கண்ணன் சுட்டு கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று (நவ.30) காலை கொளப்பலூர் ரோட்டில் உள்ள மொடச்சூர் சந்தை அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று கண்ணனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த மோகன்லாலை கோபி போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: