திங்கள், 30 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.30) திங்கட்கிழமை தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சென்னை கோரட்டூர்புரத்தை ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (டிச.30) திங்கட்கிழமை மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பவானி, அந்தியூர் சாலை பகுதியிலும், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன்சத்திரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து இருந்தனர். எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்னெச்சரிக்கையாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதன்படி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமையில், அதிமுக பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்த சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதேபோல், பவானி அந்தியூர் சாலை பகுதியில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். 

அதேபோல், ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.தென்னரசு ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் 400க்கும் மேற்பட்டோர் யார் அந்த சார்? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தசாமி, ஜெயபாலாஜி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வீரக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஈகிள் சதீஷ்குமார், மாநகர எம்.ஜி.ஆர் மன்ற துணைச் தலைவர் பொன் சேர்மன், தகவல் தொழில் நுட்ப அணி சத்தியமூர்த்தி, வீரக்குமார் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறாக, மாவட்டம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: