ஈரோடு மாவட்டம், சோலார் புதிய பேருந்து நிலையம் பின்புறம் நடந்த கந்தூரி காடு விழாவில், தற்போது மழைக்காலத்தில் பரவி வரும் நோய் நொடிகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியும், உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு நகரில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய காலரா தொற்றால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அந்த காலகட்டத்தில் பெரிய பள்ளிவாசலில் இமாமாக இருந்த பிலால் என்பவர், எல்லோரும் ஒருநாள் ஊரை விட்டு காலி செய்து, எல்லையில் கூடாரம் அமைத்து தங்குங்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அனைத்தையும் ஏழை மக்களுக்கு தானம் அளித்துவிட்டு இறைவனை தொழுது கூட்டு பிரார்த்தனை நடத்துங்கள் எனக் கூறியுள்ளார்.
இதன்படி, அனைவரும் ஒரு நாள் வீடுகளை காலி செய்து விட்டு ஈரோடு நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தள்ளியுள்ள லக்காபுரம் காவிரி ஆற்றங்கரை அருகே, காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தங்கி, கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இதனால் நோய் கட்டுக்குள் வந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை கந்தூரி காடு விழா என இஸ்லாமியர்கள் அழைக்கின்றனர்.
இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒரு திங்கள்கிழமையன்று அனைவரும், இப்பகுதியில் ஒன்று கூடி, கூடாரம் அமைத்து கந்தூரி விழா நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு கந்தூரி விழாவில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, கொடுமுடி, கரூர், பள்ளப்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு , கொக்கராயன் பேட்டை பகுதிகளில் இருந்து வந்த முஸ்லிம்கள், லக்காபுரம் அருகே குடில்களை அமைத்தனர்.
ஈரோடு பி.பி அக்ரஹாரம் அண்ணாநகர் பள்ளிவாசலின் இமாம் அஹமது அமானி தலைமையில், தற்போது மழைக்காலத்தில் பரவி வரும் நோய் நொடிகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியும், உலக நன்மை வேண்டும் என கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதனைத் தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பழம், ரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அனைவருக்கும் விநியோகித்து பகிர்ந்து உண்டனர்.
இந்நிகழ்வில் ஸபா ரபீக், முகமது அர்ஷத், பாட்ஷா, கறிக்கடை ஜாகீர், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
0 coment rios: