புதன், 11 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை பெயர் சூட்ட அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயரிட வேண்டுமென அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் ஈரோடு நல்லி அரங்கத்தில் புதனன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் வடிவேல்ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் நினைவரங்கம் அமைக்க அரசு ரூ.4 கோடியே 90 லட்சம் ஒதுக்கி அடிக்கல் நாட்டப்படுகிறது. 

இதற்கு தமிழக அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் நலத்திட்டங்களைப் பெற வருமான உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். வீட்டுமனை பட்டாவிற்கு நிலமெடுப்பு செய்வதில் உள்ள விதிமுறைகளை மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். பூமி தானம் மற்றும் நிலக்குடியேற்ற சங்கம் மூலம் வழங்கப்பட்ட விளை நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் தாட்கோ கடனுதவிகளை வழங்க வேண்டும்.

 பட்டியல் சாதியனர்க்கு சிறப்பு குறைதீர் கூட்டங்களை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த அரசாணை வெளியிட வேண்டும். கலப்பு திருமண சான்று பெறுவதில் விதிமுறைகளை மாற்றி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் 17 அமைப்புகள் கலந்து கொண்டன. பேட்டியின் போது அதன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: