வெள்ளி, 3 ஜனவரி, 2025

ஈரோட்டில் மாநில அளவிலான கலைத் திருவிழா துவக்கி வைத்த அமைச்சர்: 4,811 மாணவ, மாணவியர் பங்கேற்பு

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான கலைத் திருவிழாவினை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (ஜன.3) துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகல்வித்துறையின் சார்பில், 9, 10ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இக்கல்வியாண்டும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும். பள்ளிக் கல்விச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரால் கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

2024-2025ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டு பள்ளி, குறுவளமையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் முடிவுற்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று (ஜன.3) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் இன்று மற்றும் நாளை ((ஜன.4) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 4,811 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 2023-2024 ஆம் கல்வியாண்டில் இக்கலைத்திருவிழா போட்டிகள் "சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற்றது.


அதுபோன்று, இவ்வாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் 9 மற்றும் 10 வகுப்பு பிரிவின் கீழ் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 4,811 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, சிற்றுண்டி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் கங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் வே.செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், மாவட்டக் கல்வி அலுவலர் (கோபிசெட்டிபாளையம்) தி.திருநாவுக்கரசு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன். உதவி திட்ட அலுவலர் எஸ்.ரவிச்சந்திரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: