சனி, 4 ஜனவரி, 2025

அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி அடையாள கருவி பொருத்த நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் இரண்டு நாள் இயந்திர கண்காட்சி கருத்தரங்கு தொடங்க விழா இன்று (ஜன.4) நடைபெற்றது. இதனை, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது, கைரேகை அடிப்படையிலான ரேஷன் அட்டையில் சில சிக்கல்கள் உள்ளதால் மாநிலத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளிலும் ரூ.250 கோடி ரூபாய் செலவில் கருவிழி அடையாள கருவிகளை அரசு நிறுவி வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 700 ஆலைகள் இணைந்து இருக்கின்றது. இதன் மூலம் 12 லட்ச மெட்ரிக் டன் அரைக்கின்ற திறன் உயர்ந்து இருக்கிறது. அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரவை கூலி உயர்த்துவது அரசின் பரிசீலணையில் உள்ளது. நடப்பு ஆண்டு 1,235 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதில் 5 லட்ச 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 75 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,580 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் விலை செப்டம்பர் மாதத்திற்குள் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயை தாண்டும், திறந்தவெளி கிடங்குகளில் கொட்டுவதால் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே ஒரு நெல்லைக் கூட வீணாக்கக் கூடாது என்பதால் அதிகளவில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 90 சதவீத குடோன்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொள்முதல் நிலையம் தேவை எனில் மாவட்ட ஆட்சியரை அணுகலாம். ஒழுங்குமுறை சந்தைகளில் கொள்முதல் செய்யப்படும் நெல் மீதான ஒரு சதவீத செஸ் வரியை நீக்கவும், ஹல்லிங் கட்டணத்தை (ரூ. 40 புழுங்கல் மற்றும் 25 கச்சா அரிசி) உயர்த்தவும், 5 சதவீத ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு நீக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு தானிய ஆண்டை முன்னிட்டு தர்மபுரி,ஊட்டி பகுதிகளில் அரிசிற்கு பதிலாக கேழ்வரகு வழங்கப்படுகிறது. சிறுதானிய உற்பத்தி அதிகமானால் மற்ற பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: