வியாழன், 30 ஜனவரி, 2025

ஈரோட்டில் இன்று ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில், காரில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டரான முகமது சுகைல் என்பதும், அவர் எடுத்து வந்த பணத்திற்கு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், இன்று காலை ஈரோடு சம்பத் நகர், கொங்கு கலையரங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து, காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஜே.கே.கே. சுந்தரம் நகரை சேர்ந்த தினேஷ்குமார் என தெரியவந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதனை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதேப்போல், இன்று அதிகாலை 2 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ. 1.20 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.

பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: