சனி, 11 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அராஜகம். வன்முறை என்றாலே திமுக. திமுக என்றாலே அராஜகம், வன்முறை என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக் காலங்களில், திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.

திமுகவினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே திமுகவினரின் வாடிக்கை.

நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும், பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், பிப்.5ம் தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: