ஈரோடு கள்ளுக்கடைமேடு அண்ணாமலை பிள்ளை வீதியை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 70). கணவர் இறந்துவிட்டதால் சாவித்திரி கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு சாவித்திரி வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்தனர்.
அவர்கள் மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து, சாவித்திரி இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றதாக ஈரோடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வினோத் (வயது 32). ஆலமரத்து வீதியை சேர்ந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன் (42), நாமக்கல் மாட்டம் தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த துணிக்கடையில் வேலைபார்க்கும் புஷ்பராஜ் என் கிற அஜித் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
0 coment rios: