ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவிலான சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜைகளுடன் விழா நடைபெற்று வந்தது. நாள்தோறும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடன் சமேதராக அலங்கார வாகனங்களில் காட்சி அளித்து அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு (திங்கட்கிழமை) வசந்த மண்டபத்தில் திருக் கல்யாணம் நடந்தது. இதையொட்டி, முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை 3.30 மணிக்கு நடந்தது.
அதைத்தொடர்ந்து, காலை 5.40 மணிக்கு அலங்கார மகாதீபாரதனை நடந்தது. 6.10 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. தேர்நிலையை சாமி 6.15-க்கு வந்தடைந்தது. பின்னர், உற்சவ மூர்த்திகள் தேர் நிலையை 3 முறை வலம் வந்து சாமியை காலை 6.25-க்கு 3 தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப் பட்டனர். முதல் தேரில் விநயாகப் பெருமானும், பெரிய தேரில் முருப்பெருமான் அமர்த வள்ளி, சுந்தர வள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், 3-ம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்று சுவாமி தரிசனம் நடந்தது. இதையடுத்து காலை 6.35 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் தோப்பு.வெங்கடாச்சலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், நடராஜ், கோவில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதை தொடந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர். அப்போது அவர்கள் கந்தனுக்கு அரகரா அரகரா 'முருகனுக்கு அரகரா அரகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர். வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவியும், கடலைகாய், நெல் தூவியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேவஸ்தான அலுவலக வளாகத்தில் தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேர் காலை 6.55-க்கு தேர் தெற்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேர் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து வடக்கு ரத வீதியில் நிறுத்தப்படும். திருத்தேர் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நிலை அடைகிறது.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் வரும் 15ம் தேதி (சனிக்கிழமை)நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் நடராஜப் பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி நடைபெற உள்ளது.
0 coment rios: