சனி, 22 பிப்ரவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாஃர்ம் மற்றும் டி.பாஃர்ம் சான்று பெற்றோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழைப்பு விடப்பட்டது.

இதற்கு அரசு மானியம் தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூபாய் 3 இலட்சம் இதில் 1.5 லட்சம் ரொக்கமாகவும், 1.5 லட்சம் மருந்துகளாகவும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூபாய் 2 லட்சம் மானியமாகவும் இதில், 1 லட்சம் ரொக்கமாகவும், 1 லட்சம் மருந்துகளாகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு துவக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயுர்வேதம், யூனானி மருந்துகள் 20% முதல் 90% வரை மிகக்குறைந்த விலையிலும், மேலும் கூடுதலாக 25% வரை தள்ளுபடி விலையிலும் கிடைக்கும் பொதுமக்கள் அனைவரும் பெற்று பயனடையலாம்.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 22 இடங்களிலும், தனியார் தொழில்முனைவோர் மூலம் 14 நபர்கள் என மொத்தம் 36 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது.

இம்மருந்தகங்களை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 24ம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். அதன்படி, அனைத்து மருந்தகங்களும் செயல்படும்.

ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஆகிய 2 இடங்களிலும், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், திண்டல்மலை, நசியனூர், பி.பெ.அக்ரஹாரம், லக்காபுரம்புதூர் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 7 சங்கங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது.

அதேபோல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விளக்கேத்தி, காஞ்சிகோயில், கொளப்பலூர், கரட்டடிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கவுந்தப்பாடி, நம்பியூர், பெரியகொடிவேரி, தூக்கநாயக்கன்பளையம், பெரியவடமலைபாளையம் மற்றும் அரியப்பம்பாளையம் ஆகிய 11 சங்கங்களிலும் திறக்கப்பட உள்ளது.

இதேபோல், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி கூட்டுறவு பண்டகம் ஆகிய 2 இடங்களிலும் திறக்கப்பட உள்ளது.

மேலும், தனிநபர் சார்பில் சோலார் புதூர், அக்ரஹார தெரு ஈரோடு, ஈஸ்வரன்தெரு ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு ஈரோடு, சத்தி ரோடு வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, சென்னிமலை, கோபிசெட்டிபாளையம், குருமந்தூர்மேடு, அத்தாணி, விநாயகர் கோவில் தெரு காசிபாளையம், ஓடத்துறை மெயின்ரோடு தாழைக்கொம்பு புதூர், சின்னமொடச்சூர் கோபி, பவானி மெயின் ரோடு சலங்கபாளையம், ஆகிய 14 இடங்களிலும் என மொத்தம் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: