திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஈரோடு சோலாரில் முதல்வர் மருந்தகம் திறப்பு: அமைச்சர் முத்துசாமி விற்பனையை துவக்கி வைத்தார்!

ஈரோடு சோலார் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, மருந்துகள் விற்பனையை அமைச்சர் முத்துசாமி இன்று (பிப்.24) தொடங்கி வைத்தார்.
சென்னை மாவட்டம் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று (பிப்.24) திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சோலார் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, மருந்துகள் விற்பனையை தொடங்கி வைத்தார்.


பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் சாதாரண பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 36 மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 22 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கள் மூலமாகவும், 14 மருந்தகங்கள் தனியார் மூலமாகவும் செயல்படவுள்ளது.

இதில் ஈரோடு வட்டத்தில் -11, மொடக்குறிச்சி வட்டத்தில் 5, கொடுமுடி வட்டத்தில் - 1, பெருந்துறை வட்டத்தில் -2, கோபி வட்டத்தில் -7, நம்பியூர் வட்டத்தில் - 2, அந்தியூர் வட்டத்தில் -1, பவானி வட்டத்தில்-3, சத்தி வட்டத்தில்-4 ஆக மொத்தம் 36 முதல்வர் மருந்தகங்கள் செயல்படவுள்ளது.


இந்த மருந்தகங்கள் மூலம் இங்கு ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மிகக் குறைவான விலையிலும் பிற மருந்துகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்பட உள்ளது.

தற்போது துவங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களில் ஏறத்தாழ 216 வகையான மருந்துகள் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், துணைப்பதிவாளர் ஜி.காலிதாபானு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: