வாக்காளர்கள் வாக்களிக்க ஈரோடு வளையக்கார வீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்கு சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என்பதால் இங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரிதாபேகம் என்பவர் தனது கணவருடன் வாக்கு செலுத்த வந்துள்ளார். அவர் வரிசையில் நின்று வாக்களிக்கும் அறைக்குள் சென்றார். அப்போது அவரது ஆவணங்களை அலுவலர்கள் சரி பார்த்தபோது உங்களது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் நான் இப்போதுதான் வருகிறேன். எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார். இருப்பினும் அவரது வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவரது கணவர் மட்டும் வாக்கு செலுத்தினார்.
இது குறித்து பரிதாபேகம் கூறும்போது, வாக்கு செலுத்த சென்றபோது தனது வாக்கு ஏற்கனவே செலுத்தியதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. தனது வாக்கை செலுத்தியவரின் கையெழுத்தை காட்ட சொல்லியும் காட்டவில்லை. என்னிடம் பூத் சிலிப் உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இருப்பினும் எனது ஓட்டு எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து தீவிர விசாரித்து தனது மனைவிக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது கணவர் கோரிக்கை விடுத்தார். பின்னர் பரிதாபேகம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
0 coment rios: