ஆப்பக்கூடல் அருகே உள்ள தளவாய்பேட்டை பகுதியில் அரிசி கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 42). இவரின் கடைக்கு, நேற்று மதியம் இரண்டு வாலிபர்கள் அரிசி வாங்க வந்துள்ளனர். அப்போது, கடையில் வேலை செய்யும் பவானி வைரமங்கலம் செட்டிதோப்பை சேர்ந்த இளையம்மாள் (61) என்பவர் மட்டும் இருந்துள்ளார்.
அப்போது, அவரிடம் இரண்டு வாலிபர்களும் ஐந்து அரிசி மூட்டை வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு, இளையம்மாள் கடையில் இருந்த அரிசி மூட்டையை காட்டி, எந்த அரிசி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, அவர்கள் இரண்டு பேரும் கடையின் உள்ளே சென்று குறிப்பிட்ட அரிசி மூட்டையை காட்டி இது வேண்டும் எனக்கூறி மூன்று மூட்டையை எடை போடும் இயந்திரத்தில் வைத்து எடை பார்த்துள்ளனர். இதனிடையில், கடையின் கல்லா பெட்டி அருகே மேசையின் மீது இருந்த ஒரு பேக்கில் பணம் இருந்ததை இரண்டு பேரும் கவனித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கடையின் மேசையின் மீது இருந்த பேக்கை இரண்டு பேரும் திருடினர். பின்னர், அவர்கள் திடீரென்று அரிசி வேண்டாம் என்று கூறி நைசாக நழுவி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
பின்னர், சந்தேகத்தின் பேரில் இளையம்மாள் மேசையின் மீது வைத்திருந்த பேக்கை தேடி பார்த்துள்ளார். அப்போது, மேசையின் மீது வைத்திருந்த பேக், அதில் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அரிசி வாங்குவது போல் நடித்து மேசையின் மீது பேக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் எடுத்து சென்றதை அறிந்து, ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன், ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, வில்சன் சகாயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வடிவேலு பட பாணியில் அரிசி கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்த பகுதியில் வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: