திங்கள், 10 மார்ச், 2025

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பரிகார பூஜை செய்வதாக கூறி 5½ பவுன் நகை, ரூ.16 லட்சம் திருட்டு: 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி தபோவனம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி ருக்குமணி (வயது 67). கணவர் பிரிந்து சென்றதால், ருக்குமணி தபோவனத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இதை அறிந்த 2 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ருக்குமணி வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், அவர்கள் ருக்குமணியிடம் நைசாக பேச்சு கொடுத்து, ஜோதிடம் பார்க்கலாமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஒத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, 2 பேரும் ஜோதிடம் பார்ப்பது போல் நடித்து, உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்க பரிகார பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யாவிட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என கூறியுள்ளனர்.

இதனால், பயந்து போன ருக்குமணி பரிகார பூஜை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் பரிகார பூஜை செய்ய நிறைய பணம் செலவாகும். உங்களிடம் இருக்கும் பணம், நகையை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அதை, நம்பி,அவர் தன்னிடம் இருந்த 5½ பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.16 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணம், நகையை பெற்றுக்கொண்ட அவர்கள், வெகு நாட்களாகியும் பரிகார பூஜை செய்ய வரவே இல்லை.

அதன்பின்னர் தான் நகை, பணம் திருடி சென்றதை ருக்குமணி உணர்ந்தார். உடனே இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த குழந்தை வேல் (வயது 25), வீரமணி (36) ஆகியோர் தான் ருக்குமணியிடம் பரிகார பூஜை செய்வதாக கூறி பணம், நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, குழந்தைவேலையும், வீரமணியையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் ருக்குமணியிடம் வாங்கிய பணத்தில் சொகுசு கார் வாங்கி ஊர் சுற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிந்தது.

இதில், வீரமணி மீது ஏற்கனவே மோசடி சம்பந்தமாக ஈரோட்டில் 4 வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வழக்கும் உள்ளது. பின்னர், கைது செய்யப்பட்ட 2 பேரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: