புதன், 19 மார்ச், 2025

மண் பரிசோதனையின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அலுவலர்களுக்கு ஈரோடு ஆட்சியர் அறிவுரை

மண் பரிசோதனையின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

ஈரோடு மாவட்டம், திண்டல்மேடு, வித்யாநகரில் செயல்பட்டு வரும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் .

இந்த ஆய்வின்போது, தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான தேசிய தோட்டக்கலை இயக்கம், துளிநீரில் அதிக பயிர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 13 திட்டங்களின் இனம் வாரியான இலக்கு மற்றும் சாதனை விபரங்களை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு கவனம் மேற்கொண்டு, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட திட்ட இலக்கினை முழு சாதனை அடைய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கான சந்தையினை ஈரோடு மாநகரில் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். இதனையடுத்து, மாநில பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை ஆய்வகம், மாநில அக்மார்க் ஆய்வகம், உழவர் பயிற்சி நிலையம், தகவல் குறியீட்டு மையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், பாசன நீர் ஆய்வு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மண் பரிசோதனை செய்வதால், மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் அளவினை அறிந்திட இயலும்.

மேலும், மண்ணில் உள்ள களர் உவர் அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலம் சீர்த்திருத்தம் செய்திடவும், பயிர்களின் தேவைக்கேற்ப உரமிட்டு உரச்செலவகை குறைத்து, அதிக மகசூல் பெற்றிடவும் ஏதுவாக அமையும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரை தேர்ந்தெடுத்து, அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தினை பெருக்கிட இயலும்.

ரசாயன உரங்கள் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் மண்பரிசோதனை அவசியமாகும். எனவே, மண்பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்து, விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து மண்பரிசோதனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மை) மீ.தமிழ்ச்செல்வி, துணை இயக்குநர்கள் மரகதமணி (தோட்டக்கலைத்துறை), நிர்மலா (வேளாண் வணிகம்), துணை இயக்குநர் மற்றும் செயலாளர் சாவித்திரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: