வெள்ளி, 7 மார்ச், 2025

மத்திய-மாநில அரசுகளில் வணிகர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்: கோபியில் விக்கிரமராஜா பேட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தில் வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. வணிகர் அதிகார பிரகடன மாநாடு என்கிற தலைப்பில் நடைபெறும் இம்மாட்டிற்கான விளக்க கூட்டம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பேரமைப்பின் ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்து கொண்டார். 

தொடர்ந்து, கூட்டத்தில் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசுகையில், பல்வேறு லைசென்சுகள், பல்வேறு வகை வரிகள் என வணிகர்கள் அலைகழிக்கப்படுவதால் வணிகர்களை காக்கவும், வரிமுறைகளையும், லைசென்சு முறைகளையும் வைத்து கொண்டு அடாவடித் தனம் செய்யும் அரசு அதிகாரிகளையும், லஞ்சத்திற்கு வழிவகுக்கும் அபராத முறைகளையும் நிறுத்த வேண்டும்.

கடந்த 42 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வணிகர்களுக்காக மத்திய - மாநில அரசுகளிடம் பேரமைப்பு வைத்து வந்துள்ளது. அதில் பல கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களால் வணிக இழப்புக்கு ஆளாகி வரும் வணிகர்களை காக்க வேண்டுமானால் வணிகர்களின் மீது கொண்டு வரப்படும் அனைத்து செயல் திட்டங்களையும் வணிகர் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்தும் வணிகச் சூழலை கணக்கில் கொண்டும்.

சிறு,குறு வணிக/தொழில் நிறுவனங்களே இந்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவதை கணக்கில் கொண்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் இம்மாட்டின் மூலம் கொடுக்கும் கோரிக்கை மத்திய -மாநில அரசுகளில் வணிகர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, இக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மே 5 மாநாட்டிற்கு ஈரோடு மாவட்டத்திலிருந்து 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன், மாநில செய்தித் தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில துணைத் தலைவர் பி.திருமூர்த்தி, கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.எம்.பாலகிருஷ்ணன், ஈரோடு மாவட்டத் துணைத் தலைவர் சேரன் எஸ்.சரவணன், ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சாதிக் பாட்சா மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், இளைஞரணி மற்றும் இணைப்புச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை, கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் பி.சண்முக சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். கூட்டத்தின், முடிவில் மாவட்டப் பொருளாளர் உதயம் பி.செல்வம் நன்றியுரை ஆற்றினார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: