ஈரோட்டில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி வருகிற 26ம் தேதி மாநில அளவிலான ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டி தொடங்க உள்ளது.
திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி பாவா ஓவிய அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே நடத்தப்பட்டது. இந்நிலையில், போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் புகழ்ப்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியானது ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திருமண மண்டபத்தில் வருகிற 26ம் தேதி(சனிக்கிழமை) முதல் தொடங்கி 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
26ம் தேதி சிறப்பு நிகழ்வாக 4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவனர் குப்பண்ணன் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டியை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், எம்பி பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 27ம் தேதி மாநில அளவிலான ஓவியப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. இவ்விழாவிற்கு மண்பாண்ட கலைஞர் முனுசாமி தலைமை தாங்குகிறார்.
தமிழ் நிலம் ஓவிய அறக்கட்டளை தலைவர் ஜாபர் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று பரிசுகளை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் பொருளாளர் ஷானவாஸ் செய்துள்ளார். இந்த கண்காட்சியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இதில், பொதுமக்களும், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்று பயன்பெறலாம் என நிகழ்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: