சனி, 3 மே, 2025

ஈரோட்டில் மயோனைஸ் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

தமிழகத்தில் பரவலாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையில் செய்த மயோனைஸ் உணவை அனைவரும் விரும்பி உண்கின்றனர். முக்கியமாக குழந்தைகள் இதனை விரும்பி உண்பதால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் ஓராண்டுக்கு பச்சை முட்டையில் இருந்து மயோனைஸ் தயாரிக்கவும், இருப்பு வைக்கவும் விநியோகிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரது உத்தரவின் பேரில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேட்டரிங் உரிமையாளர்கள் மற்றும் அசைவ உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது, தடை விதிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அதை நுகர்வோர், வணிகர்கள் தவிர்க்க வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும், சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைசிலும் சேர்ந்துவிடும் என்பதால் அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்கு தடை செய்துள்ளது. இத்தடை ஆணையானது, கடந்த 8ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உணவு வணிகர்கள், கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மயோனைசை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மயோனைசை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

அரசு உத்தரவை மீறி தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப் பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உணவு பாதுகாப்பு துறையினரின் கள ஆய்வின் போது இது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பிறகு உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். உடல் நலனை பேணி காக்க ஏதுவாக, நுகர்வோரும் இதனை தவிர்க்க வேண்டும்.

எனினும் மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக, கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப் பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும்.

அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடை ஏதுமில்லை. அவை நுகர்வோரின் உடல்நிலைக்கு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவிற்குள் சாப்பிடலாம். மேலும், தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்த அறிவிப்பிற்கிணங்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பதிலாக மறுசுழற்சித் தன்மை உள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டது. 

குடிநீர் தரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சரிவிகித உணவு தொடர்பான விளக்கங்களும் சமூக ஊடகங்களில் சரிவிகித உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் அரசின் மறு சுழற்சி பயோ டீசலாக மாற்றும் திட்டத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வழங்க தெரிவிக்கப்பட்டது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரிபேக் விலை பயன்படுத்தாமல் இருக்கவும் உணவுப் பொருள்களை பாலித்தீன் பைகளில் கட்டி விற்பனை செய்யாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

செய்தித்தாள்களின் மீது உணவு பொருட்களை வைத்திருக்கக் கூடாது, மற்றும் செய்தித்தாள்களில் உணவை பரிமாற கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், நுகர்வோர் ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது டிஎன்எப்எஸ்டி என்ற செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: